Tuesday, March 18, 2008

தமிழ் விக்சனரியில் ஒரு இலட்சம் சொற்கள்

தமிழ் விக்சனரியில் தற்போது ஒரு இலட்சத்துக்கும் அதிகமான சொற்கள் சேர்க்கப்பட்டு வருகின்றன. தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியைப் பயன்படுத்தித் தானியக்கமாய் சுந்தர் இப்பணியைச் செய்து முடித்திருக்கிறார்.

சிறப்பு

* உலகின் எட்டாவது பெரிய விக்சனரியாகி இருக்கிறோம்.

* இந்திய மொழி விக்சனரிகளில் தமிழே முதல் இடம்.


பார்க்க - http://meta.wikimedia.org/wiki/Wiktionary#List_of_Wiktionaries
நன்மைகள்

- பயன்படுத்துவதற்கு இலகுவான இடைமுகப்பு.
- தளம் ஒருங்குறியில் இருப்பதால் உங்கள் கணினியில் வேறு எழுத்துருக்களை நிறுவத் தேவை இல்லை.
- கூகுள் போன்ற தேடுபொறிகளில் இருந்து தேடலாம்.
- தமிழ் இணையப் பல்கலை அகரமுதலியில் உள்ள எழுத்துப் பிழைகள், சொற் பிழைகளைத் திருத்த இயல்வதுடன் இன்னும் கூடுதல் தகவல்களைச் சேர்த்து மேம்படுத்தலாம்.
- சொற்கள் யாவும் தெளிவான பக்க முகவரிகளைக் கொண்டு இன்னொரு தளத்தில் இருந்து சொற் பொருள் அறிய இலகுவாகத் தொடுப்பு கொடுத்து எழுதலாம். எடுத்துக்காட்டுக்கு, rain என்ற சொல்லுக்கான பக்கத்துக்கான முகவரி http://ta.wiktionary.org/wiki/rain
- இச்சொற்களில் பெரும்பாலானவை அறிவியல், தொழில்நுட்பக் கலைச்சொற்கள் என்பதால் இத்துறைகளில் கட்டுரைகள் எழுத பெரிதும் உதவும்.

அறியப்பட்ட குறைகள்

- சில பக்கங்களில் சிறிய எழுத்துப் பிழைகள் இருக்கலாம். இவை பகுதி குறிமுறை மாற்றத்தின் போது நேர்ந்தவை. பகுதி, ஏற்கனவே தமிழ் இணையப் பல்கலையில் இருந்தவை.
- சில பக்கங்களில் தமிழ்ச் சொற்களுக்குப் பதில் அப்படியே ஆங்கிலச் சொற்களே தமிழ் எழுத்துக்களில் எழுதப்பட்டிருக்கலாம். சில சொற்களுக்குத் தவறான பொருள் தரப்பட்டிருக்கலாம். இவையும் ஏற்கனவே தமிழ் இணையப் பல்கலையில் இருந்தவை.

இந்த இரு குறைகளையும் போக்க நீங்களும் பங்களித்து உதவலாம்.

அடுத்து என்ன?

- இப்பணிக்காகப் பயன்படுத்திய சொற்பட்டியலை விரைவில் .txt , .pdf , தரவுத்தள வடிவங்களில் வெளியிடுவோம். இத்தானியக்கப் பணி எப்படி மேற்கொள்ளப்பட்டது என்றும் விளக்குவோம். இது குறித்த தகவல்களுக்கு இப்பதிவைக் கவனித்து வரவும்.

- இணைய இணைப்பில்லாமலேயே உங்கள் கணினியில் தரவிறக்கிப் பயன்படுத்திக் கொள்ளத் தக்க தமிழ் அகரமுதலிச் செயலி ஒன்றைச் செய்ய நினைத்திருக்கிறோம். இதில் நுட்ப உதவிப் பங்களிப்பு அளிக்க விரும்பினால் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

- Digital South Asia Library தமிழ் அகரமுதலிகளைத் தமிழ் விக்சனரியில் சேர்க்க விரும்புகிறோம். எனினும் இந்நூலக நிர்வாகிகளுடன் உரிய தொடர்புகளைப் பெற இயலவில்லை. சிகாகோவில் வாழும் தமிழ் ஆர்வலர்கள் எவரும் இந்நூலக நிர்வாகிகளுடன் தொர்புகள், அனுமதியைப் பெற்றுத் தர இயலுமானால் மிகவும் உதவும்.

- தமிழ் இணையப் பல்கலை போல் இணையத்தில் கிடைக்கும் தமிழ் அகரமுதலிகள் குறித்த தகவல்களை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். அத்தளங்களின் வலை நிர்வாகிகளுடன் உங்களுக்குத் தொடர்பு இருந்தால் இன்னும் நலம். இயன்றவரை அத்தளங்களின் தரவுகளைத் தமிழ் விக்சனரியில் சேர்க்கப் பார்க்கிறோம்.

நன்றி

1. தமிழ் இணையப் பல்கலைக்கழகம்.

ஒவ்வொரு சொல்லின் பக்கத்தில் இருந்தும் தொடர்புடைய தமிழ் இணையப் பல்கலை பக்கத்துக்குத் தொடுப்பு தந்திருக்கிறோம்.

2. தமிழ் இணையப் பல்கலை தரவுகளை குறிமுறை மாற்ற NHM Converter உதவியது.

9 மறுமொழிகள்:

வடுவூர் குமார் said...

அருமையான வேலை... வியக்கவைக்கிறது.

Nimal said...

மிகச்சிறந்த பணி...!

//- இப்பணிக்காகப் பயன்படுத்திய சொற்பட்டியலை விரைவில் .txt , .pdf , தரவுத்தள வடிவங்களில் வெளியிடுவோம்.//
இது பலவளிகளிலும் பயனுள்ளதாக இருக்கும்...!

Boston Bala said...

மாற்றங்களை எப்படி பரிந்துரைப்பது?

உதாரணத்திற்கு: incest என்பதற்கும் அதன் அர்த்தத்திற்கும் தொடர்பில்லை என்று குறிப்பிட விரும்பினால், எவ்வாறு தெரியப்படுத்தலாம்?

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

வடுவூர் குமார், நிமல் - நன்றி

பாலா, ஒவ்வொரு பக்கத்தின் மேலும் "உரையாடல்" என்ற பக்கம் இருக்கு பாருங்க. அதை எழுத்துப் போய் உங்கள் கருத்தைப் பதிவு செய்யலாம். தேவைப்பட்டால் உரையாடித் தகுந்த மாற்றம் செய்யலாம்.

மிகவும் அபத்தமான பிழைகள் என்று உணர்பவற்றை நேரடியாகவே திருத்த விடலாம்.பக்கத்தின் மேல் உள்ள "தொகு" கீற்றைப் பயன்படுத்துங்க

Umapathy (உமாபதி) said...

நன்றி ரவி, தமிழர்களாகிய நாம் பெருமைப்படவேண்டிய விடயம். இதை செய்வதற்கு தொழில்நுட்ப உதவியாக CGI Script எழுதிய சுந்தருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். மெல்லத் தமிழினிச் சாகும் என்றநிலையைத் தாண்டி உலககெங்கும் தேமதுரத் தமிழ் ஒலிக்கும் நாள் வெகுநாளில்லை. அப்படியே ஒருபடி மேல் சென்று பாபிலோன் அகராதிவடிவிலும் தமிழ் அகராதியை வெளிவிடவேண்டும். இது குறித்து தமிழ் விக்கிபீடியாவில் உரையாடியுள்ளேன் ஆனால் மைக்ரோசாப்ட் எக்ஸ்செல் 65, 536 செல்களை அனுமதிக்கின்றது இதனால் எக்ஸ்செல்வடிவில் இருந்து பாபிலோன் அகராதியிற்கு மாற்றவியலாது மாற்றுவழிகளைக் கண்டுபிடிப்போம். கடராம் வென்ற தமிழன் இன்று இணையத்தில் முன்னேறியிருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றது.

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

உமாபதி, விக்சனரியைக் தரவுத் தளக் களமாகக் கொண்டு முன்னெடுக்க வேண்டிய பணிகள் நிறைய உள்ளன. சுந்தர், மயூரன், முகுந்த் போன்றோர் இதில் ஆர்வமாக உள்ளனர். நீங்கள் அனைவரும் சேர்ந்து உழைத்து நல்ல முன்னேற்றங்களைத் தருவீர்கள் என்று எதிர்ப்பார்க்கிறேன்.

Sundar said...

ஆம், உமாபதி. விரைவில் ரவியுடன் இணைந்து ஒரு திட்டம் வரையவுள்ளேன். நாம் அனைவரும் இதைப் பலவழிகளிலும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

HK Arun said...

//* உலகின் எட்டாவது பெரிய விக்சனரியாகி இருக்கிறோம்.

* இந்திய மொழி விக்சனரிகளில் தமிழே முதல் இடம்.//

இவற்றை நான் "விக்சனரி நிரல் துண்டுடன்" இணைத்து ஓட விட்டுள்ளேன்.

புருனோ Bruno said...

//உதாரணத்திற்கு: incest என்பதற்கும் அதன் அர்த்தத்திற்கும் தொடர்பில்லை என்று குறிப்பிட விரும்பினால், எவ்வாறு தெரியப்படுத்தலாம்?//
என்ன வித்தியாசம் ??? புரியவில்லை