Tuesday, December 12, 2006

தமிழ் சொல் அறிய இங்கு கேளுங்கள்

நீங்கள் தமிழில் பொருள் அறிய விரும்பும் தமிழ், ஆங்கில சொற்கள் தமிழ் விக்சனரி தளத்தில் இல்லாவிட்டால், இங்கு பின்னூட்டுகளாக கேளுங்கள். இயன்ற அளவு விரைவாக அதற்கான சொல் அல்லது பொருளை தமிழ் விக்சனரி தளத்தில் சேர்ப்போம்.

மாற்றாக, நேரடியாக தமிழ் விக்சனரி தளத்திலும் இதற்கான வேண்டுகோளை நீங்கள் வைக்கலாம்.

அன்புடன்,
ரவி

வலைப்பதிவில் தமிழ் அகராதி சேர்ப்பது எப்படி?

உங்கள் வாசகர்கள் உங்கள் வலைப்பதிவில் இருந்தே தமிழ் அகராதியை தேட வேண்டுமா?

மாஹிர் உருவாக்கிய கருவியின் இந்த நிரல்துண்டினை வெட்டி, உங்கள் பதிவின் (அல்லது தளத்தின்) வார்ப்புருவில் சேர்த்தால், உங்கள் தளத்தில் இருந்தே தமிழ் அகரமுதலியான தமிழ் விக்சனரி தளத்தை தேட இயலும்.

உங்கள் வலைப்பதிவு வார்ப்புருவில் முந்தைய படைப்புகளுக்கான நிரலுக்கு அடுத்து மேல் உள்ள நிரல் துண்டை சேருங்கள். எடுத்துக்காட்டுக்கு, என்னுடைய பிளாக்கர் வார்ப்புருவில் எப்படி சேர்த்தேன் என்று கீழே உள்ள படிமத்தை பாருங்கள். பிளாக்கர் வார்ப்புருவில் BloggerPreviousItems என்று வரும் வரிக்கு அடுத்து இந்த நிரல் துண்டை சேர்த்துள்ளேன்.

வலைப்பதிவின் வார்ப்புருவில் மாஹிரின் நிரலை சேர்ப்பது எப்படி?


சரி, இதன் மூலம் சொற்களுக்கான பொருளை எப்படி அறிவது? இதை மாஹிரே அவரது வலைப்பதிவில் விளக்கி இருக்கிறார் பாருங்கள்.

விக்சனரி ஒரு தன்னார்வக் கூட்டு முயற்சி. எனவே இதில் பிழைகள் இருந்தால் தயவு செய்து அதை நீங்களே திருத்தலாம். அல்லது, எங்களுக்கு சுட்டிக் காட்டுங்கள். விக்சனரி குறித்து மேலும் அறிய, என் முந்தைய இடுகையை பாருங்கள்.

நீங்கள் தேடும் சொல் இல்லாவிட்டால், இந்த முகவரியில் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். இயன்ற அளவு விரைவில் தளத்தில் அதற்கான பொருளை சேர்ப்போம்.

அல்லது, நீங்கள் அறிய விரும்பும் சொற்களை பின்னூட்டுகளாக இந்த இடுகையில் கேளுங்கள்.

தமிழில் சொல் இல்லாவிட்டால் பரவாயில்லை. ஆனால், இருக்கிற சொல்லை தெரியாமல் இருக்கலாமா? வளமான நம் தாய்தமிழ் மொழியை வைத்துக்கொண்டு தேவையில்லாமல் பிற மொழிச் சொற்களை பயன்படுத்துவது, வங்கி நிறைய பணம் வைத்துக் கொண்டு தெருத்தெருவாகப் பிச்சை எடுப்பது போலத் தான். இந்தக் குறையை போக்கத் தான் நாங்கள் தமிழ் விக்சனரி தளம் மூலம் முயல்கிறோம்.

அன்புடன்,
ரவி

தமிழ் கலைச்சொற் தொகுப்பு - 11/2006


add-on - சேர்ப்பு

animation - அசைகலை

back end - பின்னகம்

bookmark - புத்தகக் குறி

buddy - நண்பர்

constant - மாறிலி

checkbox - தேர்வுப் பெட்டி

default - இயல்பிருப்பு

destination - சேருமிடம், அடையுமிடம்

diagram - விளக்கப்படம்

front end - முன்னகம்

field - புலம்

index - சுட்டெண்

graph - வரைபடம்

mouse - சொடுக்கி

netizen - வலைமகன், வலைமகள், வலைமக்கள்

presentation - அளிக்கை

rap music - சொல்லிசை

root - மூலம்

root directory - மூல அடைவு

root user - முதற் பயனர், முதன்மைப் பயனர்

source code - மூலச்செயல்நிரல்

sudo user - பொறுப்புப் பயனர்

spam - எரிதம்

trash - குப்பை

toolbar - கருவிப்பட்டை

variable - மாறி

zoom lens - உருப்பெருக்க வில்லை

zero - சுழி


--
தமிழ் விக்சனரி குழுமத்தில் ஒவ்வொரு மாதமும் உரையாடித் தொகுக்கப்படும் தமிழ் கலைச்சொற்கள், இங்கு பட்டியலாக வெளியிடப்படும். இங்குள்ள சில சொற்கள் அனைத்தும் நாங்கள் உருவாக்கியவை அல்ல. பெரும்பாலும் புழக்கத்தில உள்ள சொற்களை இனங்கண்டுத் தொகுக்கவும் முயல்கிறோம். இங்கு உள்ள சொற்கள் இறுதிப் பரிந்துரைகள் அல்ல. அப்படி ஒன்று இருக்கவும் முடியாது. இப்படியும் இதை தமிழில் சொல்லலாமே என்ற எங்கள் எண்ணமே இச்சொற் தொகுப்பு. சொற்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள, உரையாடல்களில் பங்கு எடுக்க, உங்கள் கருத்துக்களை தெரிவிக்க, இச்சொற்களுக்கான பெயர்க்காரணம் அறிய இன்றே தமிழ் விக்சனரி குழுமத்தில் இணையுங்கள்.

இப்படி நாங்கள் வெளியிடும் சொற்கள் தமிழ் வலைப்பதிவர்கள், தமிழ் இதழியலாளர்கள், தமிழ் மென்பொருள் உருவாக்குனர்கள் வழியாக பொது மக்கள் பயன்பாட்டுக்கு வர வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.

இப்பட்டியலில் உள்ள பல சொற்கள் கணிமைச் சொற்கள். எனவே இவற்றை இச்சொற்களின் பொதுப் பொருளுடன் குழப்பிக் கொள்ளக் கூடாது. எடுத்துக்காட்டுக்கு, character என்றால் குணம், கதைப்பாத்திரம் என்று அறிவோம். கணிமையில் இதற்கு வரியுரு என்று கலைச்சொல் ஆக்குகிறோம்.இன்னும் பல சொற்களின் பொருளை தமிழில் அறிய தமிழ் விக்சனரி தளத்தை பயன்படுத்துங்கள்.

அன்புடன்,
ரவி

Monday, December 11, 2006

தமிழ் கலைச்சொற் தொகுப்பு - 10/2006

தமிழ் விக்சனரி குழுமத்தில் ஒவ்வொரு மாதமும் உரையாடித் தொகுக்கப்படும் தமிழ் கலைச்சொற்கள், இங்கு பட்டியலாக வெளியிடப்படும். இங்கு உள்ள சொற்கள் இறுதிப் பரிந்துரைகள் அல்ல. அப்படி ஒன்று இருக்கவும் முடியாது. இப்படியும் இதை தமிழில் சொல்லலாமே என்ற எங்கள் எண்ணமே இச்சொற் தொகுப்பு. சொற்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள, உரையாடல்களில் பங்கு எடுக்க, உங்கள் கருத்துக்களை தெரிவிக்க, இச்சொற்களுக்கான பெயர்க்காரணம் அறிய இன்றே தமிழ் விக்சனரி குழுமத்தில் இணையுங்கள்.

இப்படி நாங்கள் வெளியிடும் சொற்கள் தமிழ் வலைப்பதிவர்கள், தமிழ் இதழியலாளர்கள், தமிழ் மென்பொருள் உருவாக்குனர்கள் வழியாக பொது மக்கள் பயன்பாட்டுக்கு வர வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.

இப்பட்டியலில் உள்ள பல சொற்கள் கணிமைச் சொற்கள். எனவே இவற்றை இச்சொற்களின் பொதுப் பொருளுடன் குழப்பிக் கொள்ளக் கூடாது. எடுத்துக்காட்டுக்கு, character என்றால் குணம், கதைப்பாத்திரம் என்று அறிவோம். கணிமையில் இதற்கு வரியுரு என்று கலைச்சொல் ஆக்குகிறோம்.

 
ஆங்கிலச் சொல் - நிகரான தமிழ்ச் சொல்
album தொகுப்பு
algorithm வழிமுறை
alphanumeric எண்ணெழுத்து
animation அசைவூட்டம்
anti virus நச்சுநிரற் கொல்லி
application செயலி
architecture கட்டமைப்பு
archive பெட்டகம்
audio ஒலி
backspace பின்னழிக்க, பின்வெளி
blog வலைப்பதிவு
boot தொடக்கு
browser உலாவி
cache memory பதுக்கு நினைவகம்
compact disc (CD) இறுவட்டு
CD player குறுவட்டு இயக்கி
character வரியுரு
clear துடை
click சொடுக்கு
client வாங்கி
code நிரற்தொடர்
column நிரல், நெடுவரிசை
configuration அமைவடிவம்
console முனையம்
cookie நினைவி
copy படி எடுக்க, படி (பெயர்ச்சொல்)
cordless தொடுப்பில்லா
cut வெட்டுக
cyber மின்வெளி
data தரவு
delete அழிக்க
design வடிவமைப்பு
digital எண்முறை
discovery கண்டறிதல்
driver இயக்கி
edit தொகுக்க
firewall அரண்
floppy நெகிழ்வட்டு
format வடிவூட்டம், வடிவூட்டு
function செயற்பாடு
gallery காட்சியகம்
graphics வரைகலை
guest வருனர்
home முகப்பு, அகம்
homepage வலையகம், வலைமனை
icon படவுரு
information தகவல்
interface இடைமுகப்பு
interpreter (computing) வரிமொழிமாற்றி
invention கண்டுபிடிப்பு
IRC இணையத் தொடர் அரட்டை
LAN உள்ளகப் பிணையம்
license உரிமம்
link இணைப்பு, தொடுப்பு, சுட்டி
live cd நிகழ் வட்டு
log in புகுபதிகை, புகுபதி
log off விடுபதிகை, விடுபதி
media player ஊடக இயக்கி
menu பட்டியல்
microphone ஒலிவாங்கி
network பிணையம், வலையம்
object பொருள்
offline இணைப்பறு
online இணைப்பில்
package பொதி
password கடவுச்சொல்
paste ஒட்டுக
patch பொருத்து
plugin சொருகு, சொருகி
pointer சுட்டி
portal வலை வாசல்
preferences விருப்பத்தேர்வுகள்
preview முன்தோற்றம்
processor முறைவழியாக்கி
program நிரல்
proprietary தனியுரிம
RAM நினைவகம்
refresh மீளேற்று
redo திரும்பச்செய்க
release வெளியீடு
repository களஞ்சியம்
row நிரை, குறுக்குவரிசை
screensaver திரைக்காப்பு
server வழங்கி
shortcut குறுக்குவழி
settings அமைப்பு
shutdown அணை
sign in புகுபதிகை, புகுபதி
sign off விடுபதிகை, விடுபதி
skin (software) ஆடை
space வெளி, இடைவெளி
speaker ஒலிபெருக்கி
spreadsheet விரி தாள்
subtitle உரைத்துணை, துணையுரை
system அமையம் / கணினி
tab தத்தல்
table அட்டவணை
terminal முனையம்
theme கருத்தோற்றம், தோற்றக்கரு
thumbnail சிறுபடம்
undo திரும்பப்பெறுக
update இற்றைப்படுத்தல், இற்றைப்படுத்து
upgrade மேம்படுத்து, மேம்படுத்தல்
URL முகவரி
version பதிப்பு
video நிகழ்படம்
view பார்க்க
virus (computers) நச்சுநிரல்
volume ஒலியளவு
wallpaper மேசைப்பின்னணி
window சாளரம்
wireless கம்பியில்லா
wizard வழிகாட்டி
worksheet பணித் தாள்
குழுமம்: http://groups.google.com/group/tamil_wiktionary

இணையத்தளம்: http://ta.wiktionary.org

தமிழ் கலைச்சொல்லாக்கக் குழுமம்

bug, format, subtitle, screensaver, video, ring tone - இது போன்ற சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? இவற்றை எங்கு அறிந்துகொள்வது என்று உங்களுக்குத் தெரியுமா? இல்லை, யாரைக் கேட்டால் விடை தெரியும் என்று உங்களுக்குத் தெரியுமா?


இது போன்று அன்றாட வாழ்க்கையோடு தொடர்புடைய ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் வழக்கமான கலைச்சொல் அகரமுதலிகளில் கிடைப்பதில்லை. அப்படி இருந்தாலும், பல சமயம் நம் வாயில் நுழையாத கடுமையான நேரடி மொழிபெயர்ப்பாக இருக்கலாம். multimedia messaging service என்னும் mmsஐ பல்லூடகத் தகவல் சேவை என்று சொன்னால், நீங்கள் அச்சொல்லை பயன்படுத்துவீர்களா? நல்ல சொற்களைப் பரிந்துரைக்கும் அகரமுதலிகளாக இருந்தால் கூட அவற்றை விலை கொடுத்து வாங்க வேண்டும். அவசரத்துக்கு கிடைக்காது. இணையத்தில் தேடிப் பெறத்தக்கதாக இருக்காது. நுட்பச் சொற்களுக்குத் தமிழ் விளக்கம் தரும் இராம.கி, வெங்கட், செல்வகுமார் போன்றோருக்கு ஒவ்வொரு சொல்லுக்கும் மடலில் விளக்கம் கேட்டுத் தொல்லை தர முடியாது.


பல்வேறு கணினி மற்றும் இணையச் சேவைகளை தமிழாக்கும் பணிகள் நடக்கும் இந்தக் காலத்தில் இந்த மாதிரி சரியான தமிழ்ச் சொற்கள் தெரியாததால் பணிகள் முடங்கிப் போகின்றன. ஒவ்வொரு குழுவும் ஒவ்வொரு மாதிரி மொழிபெயர்ப்பதால் குழப்பம் நேரிடுகிறது. வலைப்பதியும் போக்கு அதிகரித்து பல நல்ல விதயங்களையும் தமிழில் எழுத முனைபவர்கள் சரியான தமிழ்ச் சொற்கள் கிடைக்காமல் திண்டாடுகிறார்கள். இல்லை ஆங்கிலம் கலந்த தமிழில் சங்கடத்தோடு எழுதுகிறார்கள்.


இந்த மாதிரி பிரச்சினைகளை சந்திப்பவர்கள் ஒன்று கூடி ஏன் ஒரு மடலாடற்குழு தொடங்கி இது போன்ற விதயங்களை கலந்துரையாடக்கூடாது?


அப்படி ஒரு மாதம் முன்னர் உபுண்டு லினக்ஸ் தமிழாக்கக் குழுவில் எழுந்த ஒரு சிந்தனையின் காரணமாக, தமிழ் கலைச்சொல்லாக்கத்துக்காக தன்னார்வலர்கள் சேர்ந்து ஒரு மடலாடற்குழுவைத் துவங்கி இருக்கிறோம்.


குழும முகவரி:http://groups-beta.google.com/group/tamil_wiktionary


எந்தவொரு கூகுள் குழுமத்திலும் நீங்கள் இணைவது போல் இதில் இணையலாம். கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளலாம். எந்த நுழைவுத் தகுதியும் இல்லை. தனி நபர் முன்னிருத்தல், அரசியல், பக்கச்சார்புகள், அரட்டை, மட்டுறுத்தல் ஏதுமின்றி கட்டற்ற சூழலில் நீங்கள் இயங்கலாம். நீங்கள் ஒரு ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ் சொல் அறிய விரும்பினால், இக்குழுவுக்கு மடல் எழுதலாம். இணையான நல்ல தமிழ்ச் சொல் ஏற்கனவே புழக்கத்தில் இருந்தால், பிறப் பயனர்கள் உங்களுக்கு மறுமொழி தருவர். ஏற்கனவே உள்ள சொல் வளம் குறைந்ததாக இருந்தாலோ சொல்லே இல்லாமல் இருந்தாலோ புதுச் சொற்களை ஆக்குவதற்கான ஆலோசனைகள், பரிந்துரைகள், கலந்துரையாடல்கள் இடம்பெறும். எந்தக் கலந்துரையாடல்களிலும் பங்கு கொள்ளாமல் வெறுமனே உரையாடல்களை கவனித்துக் கொண்டே கூட இருக்கலாம். புதுச் சொற்களை உள்வாங்கவும் சிந்தனைப் போக்குகளை அறியவும் உதவும். இதில் முனைப்புடன் இயங்கும் உறுப்பினர்களுக்கு நீங்கள் இணைந்து கொள்வது மிகுந்த உற்சாகத்தை தரும்.


தற்போது இதில் தமிழில் நுட்பக் கலைச்சொற்களை ஆக்குவதில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறோம். தற்பொழுது உள்ள குழும உறுப்பினர்களின் பின்னணி, தேவை காரணமாக கணினி, மின்னணு சார் நுட்பச் சொற்களை அதிகமாக அலசுகிறோம். பல்வேறு துறைகளில் ஆர்வமும், புலமையும் உள்ள மேலதிகப் பயனர்கள் சேரும்போது இவ்வுரையாடல்களை அறிவியில், கணிதம் என்று பல தளங்களுக்கும் இட்டுச்செல்லலாம். இந்த மடலாடற்குழு கட்டற்ற தமிழ் அகரமுதலியான விக்சனரிக்கு துணையாகவும் இயங்கி வருகிறது. தமிழ் விக்சனரி குறித்த என் முந்தைய பதிவை இங்கு பார்க்கலாம். இந்தக் குழுவில் அலசி ஆராயப்பட்டு ஓரளவு கருத்தொத்ததாக வரும் சொற்கள் தமிழ் விக்சனரி தளத்தில் பரிந்துரைகளாகச் சேர்க்கப்படுகின்றன. இதன் மூலம் இவை பொதுப் பயன்பாட்டு வரத் துணையாகிறது.


இந்த குழுமம் தொடங்கியதிலிருந்து சுருக்கமான இனிய, எளிய கலைச்சொற்களுக்கான தேவை திரும்பத் திரும்ப வலியுறுத்தப்படுகிறது. மிகவும் செந்தமிழில் அமைந்த கலைச்சொற்கள் பரிந்துரையோடு முடங்கிப் போவதையும், பொதுப் பயன்பாட்டில் நகைப்புக்குள்ளாவதையும் சில சமயம் பார்க்கலாம்.


இந்தக் குழுமத்தின் செயல்பாட்டை ஒரு துணிக்கடையின் செயல்பாட்டுடன் பொருத்திப் பார்க்கலாம். கடையில் எவ்வளவு தான் துணிகள் இருந்தாலும் வருபவன் அவனுக்கு எதை வாங்க இயலுமோ எதை வாங்க விருப்பமோ அதை தான் வாங்கிச் செல்வான். எவ்வளவு தரமான துணியாக இருந்தாலும் வருபவனுக்கு கட்டுபடியாகாத விலையில், பிடிக்காத வண்ணத்தில் இருந்தால் விற்பனையாகப் போவதில்லை. எங்கு அவனுக்குப் பிடித்த மாதிரி இருக்கிறதோ அந்தக் கடைக்குச் செல்வான். அது போல் கடையை பகட்டாக வைத்திருந்தால், எளியோர் கடைக்குள் வராமல் விலகிச் செல்லக்கூடும்.


தமிழ் கலைச்சொல்லாக்கத்தையும் இதற்கு இணையாக நோக்கலாம். என்னதான் தமிழறிஞர்கள் ஆயிரம் இலக்கிய இலக்கணங்களை அலசி ஆராய்ந்து ஒற்றை கலைச்சொல்லை தந்தாலும் எளிய மக்களுக்கு அது புரியாத வண்ணம் கடினமாக இருந்தால் விற்காத சரக்கு போல் கலைச்சொல்லாக்க அகரமுதலிகளுடன் தேங்கி விடும் ஆபத்து உண்டு. அதுவும் கணினிகள், மின்னணு நுட்பங்கள் படிப்பறிவற்றோர் கையிலும் தவழும் வாய்ப்புகள் மிகவும் அதிகம் உள்ள இந்தக் காலத்தில் அவர்கள் வாழ்வில் ஏற்கனவே அறிமுகமான சொற்களில் இருந்து கலைச்சொற்களை உருவாக்க முயல வேண்டும். இப்படித் தான் செய்ய வேண்டும் என்றில்லை. ஆனால், இந்தச் சிந்தனை நல்ல பல சொற்களை பயன்பாட்டுக்கு கொண்டு வர உதவும். இல்லாவிட்டால் எளிய, பழகிய சொற்கள் கிடைக்கும் ஆங்கிலக் கடையில் கூட்டம் மண்டுவதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை.


ஆக, இக்குழுமத்தின் நோக்கமாக ஏற்கனவே புழக்கத்தில் உள்ள கலைச்சொற்களை அறிவது, அவற்றை தேவைப்பட்டால் மேம்படுத்துவது, புழக்கத்தில் உள்ள பொதுச்சொற்களில் இருந்து கலைச்சொற்களை உருவாக்குவது, நுட்பப் பிழை இல்லாத, எவ்வளவு தரமான நல்ல எளிய சொற்பரிந்துரைகளாக தர இயலுமோ அவற்றை தருவது என்று கொள்ளலாம். இக்குழுவின் பணியாக நல்ல பரிந்துரைகளை தருவதை மட்டுமே கொள்ளலாம். எதையும் இது தான் சிறந்தது என்று இறுதி செய்து நாங்கள் திணிப்பதில்லை. மக்களுக்கான சொல்லை மக்களை இறுதி செய்வர் என்று நம்புகிறோம். ஈருருளி என்றெல்லாம் bicycleக்கு கலைச்சொற்கள் ஆக்கப்பட்டிருந்தாலும், மிதிவண்டி என்ற எளிய சொல்லே புழக்கத்தில் நிலைத்தது கவனிக்கத்தக்கது. ஒரு வழியில் இது கூட திறவூற்று இயக்கத்துக்கு ஒப்பு நோக்கத்தக்கது தான்..அங்கு project development, beta testing, bug fixing அனைத்தும் மக்களின் இணைப்பங்களிப்புடன் செயல்படுவதால் திறம் மிக்கதாக இருக்கிறது. அது போல் இதையும் கருதலாம். இன்னும் அதிக மக்கள் நம் குழுமத்தில் இணைய இணைய கலைச்சொல்லாக்கம் குறித்த பன்முகப் பார்வை கிடைக்கும்.


இந்தக் குழுவின் சிறப்பு என்னவென்றால், இது சொற்களை ஆக்குபவர்கள் - சொற்களைப் பயன்படுத்துபவர்கள் - சொற்களைத் தேடுபவர்கள் ஆகிய அனைவரையும் ஒரே புள்ளியில் இணைக்கிறது. இவர்களுக்கு இடையில் கருத்துப் பரிமாற்றத்துக்கான ஒரு களமாக இருக்கிறது. பூட்டிய அறைக்குள் நான்கைந்து அறிஞர்கள் மட்டும் அமர்ந்து பேசி கலைச்சொற்களை இறுதி செய்து அவற்றை மக்கள் மேல் திணிப்பதற்குப் பதிலாக, இதை மக்களோடு மக்களாக அவர்களும் இணைந்து செய்ய வழிவகுக்கிறது. இலங்கை, மலேசியா, தமிழகம் என்று ஒவ்வொரு ஊரிலும் கலைச்சொல்லாக்கக்குழுக்கள் தனித்தியங்கி தமிழ்வழி அறிவியல் முன்னேற்றத்தில் குழப்பத்தையும் தேக்கத்தையும் உண்டாக்காமல், உலகம் முழுமைக்குமான ஒரு தமிழ்க் கலைச்சொல்லாக்கக் குழுவாக இதை வளர்த்தெடுக்க விரும்புகிறோம். மென்பொருள் உருவாக்கத்தில் மைய அமைப்புகள், திரைமறைவு அமைப்புகள் தகர்ந்து திறவூற்று இயக்கங்கள் வெற்றி அடைந்து வருவது போல் இதுவும் தமிழ் மொழியை முன்னெடுத்துச் செல்வதில் ஒரு முக்கிய நிகழ்வாக இருக்கும் என்று எதிர்ப்பார்த்து ஊக்கத்துடன் இயங்கி வருகிறோம். இப்பொழுது இக்குழுவில் இயங்குபவர்கள் பலரும் ஆர்வமுடைய இளைஞர்கள் என்றாலும் எங்களின் தமிழறிவும் ஆழமும் மட்டுப்படுத்தப்பட்டதே. எனவே, தமிழ் கலைச்சொல்லாக்கத்தில் கரை கண்ட அனுபவம் வாய்ந்த அறிஞர்கள் எங்களோடு இணைந்து பங்களிக்க, வழிப்படுத்த முன்வர வேண்டும் என்பதற்கான அழைப்பாகவும் இதை கருதலாம்.


ஒரு மனிதன் அறிந்திருக்கும் மொழி தான் அவனது சிந்தனை வளத்தை, அறிவுப் பரப்பைத் தீர்மானிக்கிறது. ஒரு இனத்தின் மொழி தான் அதன் பண்பாட்டை, திறத்தை பறைசாற்ற சிறந்த கருவியாக இருக்கிறது. Privacy என்ற சொல்லுக்கு தமிழ்ச் சொல் அறியத் திண்டாடுகையில் வேண்டுமானால், எங்கள் பணபாட்டில் ஒளிவுமறைவு இல்லை என்று தேற்றிக் கொள்ளலாம். பட்டினி என்ற சொல்லே இல்லையென்றால் எங்கள் நாட்டின் வளம் குறித்து பெருமைப்படலாம். ஆனால், அன்றாடம் பயன்படுத்தும் பாதிப் பொருட்களுக்கு, அன்றாடம் நம்மை இயக்கும் பாதி சிந்தனைகளுக்கு எம்மிடம் சொற்கள் இல்லையென்றால் அது எந்த விதத்திலும் பெருமிதம் தருவது அன்று.


ஒரு மொழியில் உள்ள சொற்களின் வளம், எல்லை தான் அந்த மொழியைப் பேசுபவனின் வளர்ச்சி எல்லையையும் தீர்மானிக்கிறது. மன உணர்வுகள், மரபு அல்லது சூழல் சார் சிந்தனைகள், பொருட்கள், இடங்கள் ஆகியவற்றுக்கு பெரும்பாலான வளம் மிக்க மொழிகளில் தனிச்சொற்கள் உள்ளன. ஒரு மொழியைப் பேசுவோரின் பரப்புக்கு வெளியில் இருந்து புதுச்சிந்தனைகள், பொருட்கள் வரும்போது அதைத் தங்கள் மொழியூடாகவே புரிந்து கொள்ள முனைகின்றனர். அப்படிச் சொற்கள் இல்லாதபோது. தங்கள் மொழி மரபுக்கு ஏற்ப புதுச் சொல்லாக்கம் செய்வது கால மாற்றத்துக்கும் தேவைக்கும் ஏற்பத் தானாக தனித்து உணரா வண்ணம் நிகழ்ந்து வர வேண்டிய ஒன்று. சீன, சப்பானிய மொழிகள் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளன. அவர்கள் மொழியின் நிகழ்கால வளமும் நிறைவும் அவர்கள் நாட்டு வளர்ச்சியும் இறையாண்மையும் ஒப்பு நோக்கத்தக்கது.


உலகளாவிய சிந்தனைகள், அறிவியல் நுட்பங்களை ஆங்கிலம் வழி அறிந்த நம் முன்னோர் அவற்றை தமிழ்ச் சிந்தனைக்கு ஆக்கித் தராமல், ஆங்கிலத்தை மட்டும் சொல்லித் தந்தது பெரும் பிழை. இதனாலேயே, இலக்கியம், ஆன்மிகத்துக்கான மொழியாகத் தமிழ் சுருங்கிப் போனதும் பொருளாதாரத் தேவைகளுக்காக ஆங்கிலத்தை சார்ந்திருக்கப் போய் சமூகப் பிளவுகளும் வந்தன. ஆங்கிலம் வழி முழுக்கப் பயின்றோர் தமிழாக்கப் பணிகளுக்கு வரும்போது சிந்தனைகளை தமிழாக்கமல் சொற்களை மட்டும் தனித்தனியாகத் தமிழாக்குவதும் நகைப்புக்குரிய மக்களின் வாழ்வோடு ஒட்டாத மொழிபெயர்ப்புகளை ஈனுகிறது. எனினும், முன்னோர்களையே குறை கூறிக்கொண்டிருக்காமல் பொறுப்பை நம் கையில் எடுக்கும் ஒரு முயற்சியாக இக்குழுவின் செயல்பாடுகளை கருதுகிறோம். ஆகவே உங்கள் அனைவரையும் எங்களுடன் இணைந்து பங்களிப்பும் உற்சாகமும் தருமாறு வேண்டுகிறோம்.


சரி, bug, format, subtitle, screensaver, video, ring tone - ஆகியவற்றுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் என்னவென்று அறிய உங்களுக்கு ஆவலா?


bug - வழு; format - வடிவூட்டம்; subtitle - உரைத்துணை அல்லது துணையுரை; screensaver - திரைக்காப்பு; video - நிகழ்படம்; ring tone - அழைப்போசை.


கடந்த ஒரு மாதத்தில் இது போன்று பல சொற்களுக்கும் புழக்கத்தில் இருக்கும் சொற்களை கண்டறிந்திருக்கிறோம். புதிதாக சொற்களை உருவாக்கியும் இருக்கிறோம். அவற்றை தனி இடுகையாகத் தருகிறேன்.


அன்புடன்,
ரவி.

|

விக்சனரி (பன்மொழி - தமிழ் இணைய அகரமுதலி)

இணையத்தில் ஒரு முழுமையான ஆங்கிலம் - தமிழ் - ஆங்கிலம் அகரமுதலி இல்லாமல் இருப்பது பெரும் குறையாக இருந்து வருகிறது. ஆங்கிலம் நன்றாக அறிந்தவர்கள் Dictionary.com போன்ற தளங்களை பயன்படுத்த இயலும் என்றாலும், அவர்களுக்கும் ஓர் ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்னவென்று அறிவதில் சிரமம் உள்ளது. எளிய பள்ளிப்படிப்பு படித்த தமிழ் மட்டும் நன்கு அறிந்தோரும், ஆங்கிலம் பேசா நாடுகளில் வாழும் புலம் பெயர்ந்த தமிழர்களும் இணையத்தை பயன்படுத்துவது அதிகரித்து வரும் வேளையில் ஆங்கிலச் சொற்களுக்கான பொருளை தமிழ் மூலம் அறிந்து கொள்ளும் தேவை கூடி வருகிறது.

அங்கங்கு சிதறிக்கிடக்கும் ஆங்கிலம் - தமிழ் அகரமுதலிகள் கூட சொற்தொகுப்புகளாகவோ கலைச்சொல் திரட்டுகளாகவோ தான் உள்ளன. இவை பெரும்பாலான இணையப் பயனர்களுக்கு எளிதில் அறிய இயலாததாக உள்ளன. இவை பெரும்பாலும் சொற்களுக்கு ஒற்றை தமிழ்ச் சொல்லில் குத்து மதிப்பான பொருள் / தமிழாக்கம் தருவதுடன் நிறுத்திக் கொள்கின்றன. சொல்லின் மூலம், இலக்கண வகை, பயன்பாடுகள், உச்சரிப்பு முறைகள் போன்ற கூறுகளை விளக்குவதில்லை. ஒத்த பிற சொற்களையோ பிற மொழிகளில் ஒத்த சொற்களையோ அறியத் தருவதில்லை. பல அகரமுதலிகள் ஒருங்குறி எழுத்துருவை பயன்படுத்துவதில்லை. அப்படியே பயன்படுத்தினாலும் தகவல் தரவில் இருந்து வினவியே சொற்களுக்கான பொருள் அறிய வேண்டியிருப்பதால் கூகுள் போன்ற தளங்களில் இருந்து சொற்களுக்கான பொருளை வினவி அறிய இயலாது.

பல அகரமுதலிகள் பழந்தமிழ்ச் சொற்களுக்கான பொருளை தருவதாகவும் பழைய நிகண்டுகளை வலையேற்றுவனவாகவும் உள்ளன. நிகழ் காலச் சொற்களுக்கு பொருள் அறிய முடியாது. சொற்களுக்கான பொருளில் உள்ள தவறை நீக்குவதற்கோ அவற்றை மேம்படுத்துவதற்கோ வழியில்லை. தமிழ் இணையப் பல்கலைகழக கலைச்சொல் திரட்டுகள் பயன் மிகுந்ததாய் இருந்தாலும், அத்தளத்துக்குள் நுழைந்து தேடுவதே பாதாள குகைக்குள் நுழைவது போல் மோசமாக தளம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து பொறுப்பானவர்களுக்கு எழுதினாலும் மறுமொழிகள் வருவதில்லை; வராது என்பதும் ஆனா ஆவன்னா படித்த எல்லாருக்கும் தெரியும் :( . ஓரளவு பயனுள்ள அகரமுதலிகள், நிறுவனங்கள் வழங்குவதால் பதிப்புரிமையின் காரணமாக காக்கப்பட்டுள்ளன. நம் விருப்பத்துக்கு ஏற்ப பயன்படுத்த முடியாது.

இக்குறைகளைத் தீர்க்கும் வகையில் பல தமிழார்வலர்கள் இணையத் தமிழ் அகரமுதலி ஒன்றை உருவாக்க முனைந்தாலும் அவை தனிப்பட்ட முயற்சிகளாகவும் ஒரே வேலையை பலர் திரும்பத் திரும்ப வீணாகச் செய்வதாயும் தனி நபர் பெருமையை முன்னிறுத்துவதாகவும் உள்ளன. மேற்கண்ட அனைத்துக் குறைகளையும் தீர்ப்பதாய் இல்லாமலும் ஆர்வமுடைய பிறரும் எளிதில் இணைந்து பங்களிக்கவல்ல வெளிப்படையான நடைமுறைகளை கொண்டிருப்பதாகவும் இல்லை.

இவ்வனைத்து குறைகளையும் தீர்க்கும் வண்ணம், கட்டற்ற பன்மொழி - தமிழ் - பன்மொழி அகரமுதலி ஒன்றை உருவாக்கும் முயற்சியாக கடந்த ஈராண்டுகளாக தமிழ் விக்சனரி தளம் செயல்பட்டு வருகிறது. செயல்பாடு, கொள்கைகள், பயன்பாட்டில் இது தமிழ் விக்கிபீடியா தளத்தை ஒத்தது. அத்திட்டத்தை நடத்தும் இலாப நோக்கமற்ற விக்கிமீடியா நிறுவனத்தாலேயே பல மொழிகளிலும் நடத்தப்படுகிறது. தற்பொழுது இத்தளத்தில் 3000 சொற்களுக்கும் மேல் பொருள் சேர்க்கப்பட்டுள்ளது. இவற்றுள் தமிழ், ஆங்கில, ஜெர்மன் சொற்கள் அடங்கும். தற்பொழுது பெரும்பாலும் பங்களிப்பாளர் பின்புலத்தின் காரணமாக ஆங்கிலம் - தமிழ் அகரமுதலியை வளர்த்து எடுக்க கவனம் செலுத்தி வருகிறோம். சொற்களுக்கான பொருள் நல்ல தமிழில் வழங்கப்படுகிறது. ஒரு சொல் பெயர்ச்சொல்லா வினைச்சொல்லா என்பது முதலிய குறிப்புகள், ஒரு சொல்லை எப்படி பயன்படுத்துவது என்பதற்கு எடுத்துக்காட்டுச் சொற்றொடர்கள், உச்சரிப்பு ஒலிக்கோப்புகள், பொருத்தமான படங்கள், அச்சொல்லுக்கான பிற மொழி விக்சனரி இணைப்புகள் ஆகியவை தரப்படுகின்றன.

நீங்கள் அறிய விரும்பும் சொல்லை Googleல் இருந்தே தேடலாம். எடுத்துக்காட்டாக, mosquito ஆங்கிலம் என்ற குறிச்சொல்லை கொண்டு தேடினால் கூகுளில் முதல் முடிவாகவே விக்சனரி பக்க இணைப்பு இருக்கும். இதே முறையை பிற சொற்களை தேடவும் கையாளலாம். அனேகமாக முதற்பக்க முடிவுகளில் விக்சனரி இணைப்பு வந்து விடும். தளத்தில் உள்ள தேடல் பெட்டியைக் கொண்டோ அகரவரிசைப் பட்டியலைக் கொண்டோவும் தேடலாம். தேடிய சொல் காணக்கிடைக்காவிட்டால், அதை சேர்க்குமாறு தளத்தில் தெரிவிக்கலாம். எளிமையான சொல்லாக இருக்கும்பட்சத்தில் ஒரு நாளில் பொருள் சேர்க்கப்படுவது உறுதி. ஏற்கனவே உள்ள பக்கங்களில் திருத்தங்கள் செய்யலாம். நீங்களே புதிதாக ஒரு சொல்லுக்கான பொருளை சேர்க்கலாம். ஒரு சொல்லின் பொருள் குறித்த ஐயம், ஆலோசனை இருந்தால் அச்சொல்லுக்கான பேச்சுப் பக்கத்தில் கலந்துரையாடலாம். எவரும் அவர் விரும்பிய வண்ணம் கட்டுப்பாடின்றி பயன்படுத்தலாம், பங்களிக்கலாம் என்பதே இத்தளத்தின் சிறப்பு. பல பங்களிப்பாளர்களும் தொடர்ந்து தளத்தை கவனித்து வருவதால் பிழையான பங்களிப்புகள் உடனடியாக சரிசெய்யப்படுவதும் உறுதி.

இவ்வாக்கங்கள் யாவும் முழுக்க முழுக்க விருப்பத்தின் பேரில் தன்னார்வ முயற்சியாக செய்யப்படுகிறது. யாருடைய பெயரையும் முன்னிலைப்படுத்துவதில்லை. கோஷ்டி சேர்ப்பதில்லை. ஏற்கனவே இத்தளம் குறித்த விழிப்புணர்வு சிலருக்கு இருந்தாலும், எழுத்துப் பங்களிப்புகள் மிகக் குறைவாகவே உள்ளன. இது போன்ற முழுமையான தமிழ் அகரமுதலிகளை நிறுவனங்கள் உருவாக்கித் தரும் என்று எதிர்ப்பார்க்க முடியாது. உருவாக்கித் தரும் வரை காத்திருக்கவும் முடியாது. எனவே இத்தளத்தை ஆர்வமுடைய பிறருக்கு அறிமுகப்படுத்தும் விதமாகவும் கூடுதல் பங்களிப்புகளை ஈர்க்கும் விதமாகவும் இப்பதிவை எழுதுகிறேன்.

தமிழ் விக்கிபீடியா போன்று இத்தளமும் தமிழ் கணிமை இயக்கத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக விளங்கும் என்பதில் ஐயமில்லை. தமிழ் மூலம் பள்ளியில் பயிலும் சிறுவர்கள், தமிழ் மொழி பயிலும் பிற மொழியினர் ஆகியோருக்கு இது முக்கியமான கருவியாகத் திகழும். கலைச்சொல் முயற்சிகள், விவாதங்கள் ஆகியவற்றுக்கான மையமாகவும் விக்சனரி திகழும். ஏற்கனவே பல தளங்களிலும் சிதறிக் கிடக்கும் கலைச்சொல்லாக்கங்களையும் இங்கு திரட்டும் முயற்சிகளும் நடைபெறுகின்றன. சொற்களுக்கான பொருள் நல்ல தமிழில் விளக்கப்படுவதால், தமிழில் கலந்துள்ள பிற மொழிச்சொற்களையும் இனங்காணலாம். தற்பொழுது ஆங்கிலம் - தமிழ் அகரமுதலிக்கே கவனம் செலுத்தப்படுகிறது என்றாலும், பங்களிப்பாளர் திறன், அறிவைப் பொருத்து அவர்கள் தமிழ் உள்ளிட்ட எம்மொழிச் சொல்லுக்கும் தமிழில் பொருள் தரலாம்.

தமிழ் விக்சனரி

மேலும் இந்த நிரல்துண்டினை வெட்டி, உங்கள் பதிவின் அல்லது தளத்தின் ஒரத்தில் இட்டு, விக்சனரியை விளம்பரப் படுத்துங்கள். மேலும், கூகுள் Pagerank அதிகமாகி, நீங்கள், கூகுளில் தேடும் போது, விக்சனரியில் இருந்தால், அதை முதற்பக்கத்தில் காண வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.

நன்றி.