Monday, December 11, 2006

தமிழ் கலைச்சொல்லாக்கக் குழுமம்

bug, format, subtitle, screensaver, video, ring tone - இது போன்ற சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? இவற்றை எங்கு அறிந்துகொள்வது என்று உங்களுக்குத் தெரியுமா? இல்லை, யாரைக் கேட்டால் விடை தெரியும் என்று உங்களுக்குத் தெரியுமா?


இது போன்று அன்றாட வாழ்க்கையோடு தொடர்புடைய ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் வழக்கமான கலைச்சொல் அகரமுதலிகளில் கிடைப்பதில்லை. அப்படி இருந்தாலும், பல சமயம் நம் வாயில் நுழையாத கடுமையான நேரடி மொழிபெயர்ப்பாக இருக்கலாம். multimedia messaging service என்னும் mmsஐ பல்லூடகத் தகவல் சேவை என்று சொன்னால், நீங்கள் அச்சொல்லை பயன்படுத்துவீர்களா? நல்ல சொற்களைப் பரிந்துரைக்கும் அகரமுதலிகளாக இருந்தால் கூட அவற்றை விலை கொடுத்து வாங்க வேண்டும். அவசரத்துக்கு கிடைக்காது. இணையத்தில் தேடிப் பெறத்தக்கதாக இருக்காது. நுட்பச் சொற்களுக்குத் தமிழ் விளக்கம் தரும் இராம.கி, வெங்கட், செல்வகுமார் போன்றோருக்கு ஒவ்வொரு சொல்லுக்கும் மடலில் விளக்கம் கேட்டுத் தொல்லை தர முடியாது.


பல்வேறு கணினி மற்றும் இணையச் சேவைகளை தமிழாக்கும் பணிகள் நடக்கும் இந்தக் காலத்தில் இந்த மாதிரி சரியான தமிழ்ச் சொற்கள் தெரியாததால் பணிகள் முடங்கிப் போகின்றன. ஒவ்வொரு குழுவும் ஒவ்வொரு மாதிரி மொழிபெயர்ப்பதால் குழப்பம் நேரிடுகிறது. வலைப்பதியும் போக்கு அதிகரித்து பல நல்ல விதயங்களையும் தமிழில் எழுத முனைபவர்கள் சரியான தமிழ்ச் சொற்கள் கிடைக்காமல் திண்டாடுகிறார்கள். இல்லை ஆங்கிலம் கலந்த தமிழில் சங்கடத்தோடு எழுதுகிறார்கள்.


இந்த மாதிரி பிரச்சினைகளை சந்திப்பவர்கள் ஒன்று கூடி ஏன் ஒரு மடலாடற்குழு தொடங்கி இது போன்ற விதயங்களை கலந்துரையாடக்கூடாது?


அப்படி ஒரு மாதம் முன்னர் உபுண்டு லினக்ஸ் தமிழாக்கக் குழுவில் எழுந்த ஒரு சிந்தனையின் காரணமாக, தமிழ் கலைச்சொல்லாக்கத்துக்காக தன்னார்வலர்கள் சேர்ந்து ஒரு மடலாடற்குழுவைத் துவங்கி இருக்கிறோம்.


குழும முகவரி:http://groups-beta.google.com/group/tamil_wiktionary


எந்தவொரு கூகுள் குழுமத்திலும் நீங்கள் இணைவது போல் இதில் இணையலாம். கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளலாம். எந்த நுழைவுத் தகுதியும் இல்லை. தனி நபர் முன்னிருத்தல், அரசியல், பக்கச்சார்புகள், அரட்டை, மட்டுறுத்தல் ஏதுமின்றி கட்டற்ற சூழலில் நீங்கள் இயங்கலாம். நீங்கள் ஒரு ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ் சொல் அறிய விரும்பினால், இக்குழுவுக்கு மடல் எழுதலாம். இணையான நல்ல தமிழ்ச் சொல் ஏற்கனவே புழக்கத்தில் இருந்தால், பிறப் பயனர்கள் உங்களுக்கு மறுமொழி தருவர். ஏற்கனவே உள்ள சொல் வளம் குறைந்ததாக இருந்தாலோ சொல்லே இல்லாமல் இருந்தாலோ புதுச் சொற்களை ஆக்குவதற்கான ஆலோசனைகள், பரிந்துரைகள், கலந்துரையாடல்கள் இடம்பெறும். எந்தக் கலந்துரையாடல்களிலும் பங்கு கொள்ளாமல் வெறுமனே உரையாடல்களை கவனித்துக் கொண்டே கூட இருக்கலாம். புதுச் சொற்களை உள்வாங்கவும் சிந்தனைப் போக்குகளை அறியவும் உதவும். இதில் முனைப்புடன் இயங்கும் உறுப்பினர்களுக்கு நீங்கள் இணைந்து கொள்வது மிகுந்த உற்சாகத்தை தரும்.


தற்போது இதில் தமிழில் நுட்பக் கலைச்சொற்களை ஆக்குவதில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறோம். தற்பொழுது உள்ள குழும உறுப்பினர்களின் பின்னணி, தேவை காரணமாக கணினி, மின்னணு சார் நுட்பச் சொற்களை அதிகமாக அலசுகிறோம். பல்வேறு துறைகளில் ஆர்வமும், புலமையும் உள்ள மேலதிகப் பயனர்கள் சேரும்போது இவ்வுரையாடல்களை அறிவியில், கணிதம் என்று பல தளங்களுக்கும் இட்டுச்செல்லலாம். இந்த மடலாடற்குழு கட்டற்ற தமிழ் அகரமுதலியான விக்சனரிக்கு துணையாகவும் இயங்கி வருகிறது. தமிழ் விக்சனரி குறித்த என் முந்தைய பதிவை இங்கு பார்க்கலாம். இந்தக் குழுவில் அலசி ஆராயப்பட்டு ஓரளவு கருத்தொத்ததாக வரும் சொற்கள் தமிழ் விக்சனரி தளத்தில் பரிந்துரைகளாகச் சேர்க்கப்படுகின்றன. இதன் மூலம் இவை பொதுப் பயன்பாட்டு வரத் துணையாகிறது.


இந்த குழுமம் தொடங்கியதிலிருந்து சுருக்கமான இனிய, எளிய கலைச்சொற்களுக்கான தேவை திரும்பத் திரும்ப வலியுறுத்தப்படுகிறது. மிகவும் செந்தமிழில் அமைந்த கலைச்சொற்கள் பரிந்துரையோடு முடங்கிப் போவதையும், பொதுப் பயன்பாட்டில் நகைப்புக்குள்ளாவதையும் சில சமயம் பார்க்கலாம்.


இந்தக் குழுமத்தின் செயல்பாட்டை ஒரு துணிக்கடையின் செயல்பாட்டுடன் பொருத்திப் பார்க்கலாம். கடையில் எவ்வளவு தான் துணிகள் இருந்தாலும் வருபவன் அவனுக்கு எதை வாங்க இயலுமோ எதை வாங்க விருப்பமோ அதை தான் வாங்கிச் செல்வான். எவ்வளவு தரமான துணியாக இருந்தாலும் வருபவனுக்கு கட்டுபடியாகாத விலையில், பிடிக்காத வண்ணத்தில் இருந்தால் விற்பனையாகப் போவதில்லை. எங்கு அவனுக்குப் பிடித்த மாதிரி இருக்கிறதோ அந்தக் கடைக்குச் செல்வான். அது போல் கடையை பகட்டாக வைத்திருந்தால், எளியோர் கடைக்குள் வராமல் விலகிச் செல்லக்கூடும்.


தமிழ் கலைச்சொல்லாக்கத்தையும் இதற்கு இணையாக நோக்கலாம். என்னதான் தமிழறிஞர்கள் ஆயிரம் இலக்கிய இலக்கணங்களை அலசி ஆராய்ந்து ஒற்றை கலைச்சொல்லை தந்தாலும் எளிய மக்களுக்கு அது புரியாத வண்ணம் கடினமாக இருந்தால் விற்காத சரக்கு போல் கலைச்சொல்லாக்க அகரமுதலிகளுடன் தேங்கி விடும் ஆபத்து உண்டு. அதுவும் கணினிகள், மின்னணு நுட்பங்கள் படிப்பறிவற்றோர் கையிலும் தவழும் வாய்ப்புகள் மிகவும் அதிகம் உள்ள இந்தக் காலத்தில் அவர்கள் வாழ்வில் ஏற்கனவே அறிமுகமான சொற்களில் இருந்து கலைச்சொற்களை உருவாக்க முயல வேண்டும். இப்படித் தான் செய்ய வேண்டும் என்றில்லை. ஆனால், இந்தச் சிந்தனை நல்ல பல சொற்களை பயன்பாட்டுக்கு கொண்டு வர உதவும். இல்லாவிட்டால் எளிய, பழகிய சொற்கள் கிடைக்கும் ஆங்கிலக் கடையில் கூட்டம் மண்டுவதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை.


ஆக, இக்குழுமத்தின் நோக்கமாக ஏற்கனவே புழக்கத்தில் உள்ள கலைச்சொற்களை அறிவது, அவற்றை தேவைப்பட்டால் மேம்படுத்துவது, புழக்கத்தில் உள்ள பொதுச்சொற்களில் இருந்து கலைச்சொற்களை உருவாக்குவது, நுட்பப் பிழை இல்லாத, எவ்வளவு தரமான நல்ல எளிய சொற்பரிந்துரைகளாக தர இயலுமோ அவற்றை தருவது என்று கொள்ளலாம். இக்குழுவின் பணியாக நல்ல பரிந்துரைகளை தருவதை மட்டுமே கொள்ளலாம். எதையும் இது தான் சிறந்தது என்று இறுதி செய்து நாங்கள் திணிப்பதில்லை. மக்களுக்கான சொல்லை மக்களை இறுதி செய்வர் என்று நம்புகிறோம். ஈருருளி என்றெல்லாம் bicycleக்கு கலைச்சொற்கள் ஆக்கப்பட்டிருந்தாலும், மிதிவண்டி என்ற எளிய சொல்லே புழக்கத்தில் நிலைத்தது கவனிக்கத்தக்கது. ஒரு வழியில் இது கூட திறவூற்று இயக்கத்துக்கு ஒப்பு நோக்கத்தக்கது தான்..அங்கு project development, beta testing, bug fixing அனைத்தும் மக்களின் இணைப்பங்களிப்புடன் செயல்படுவதால் திறம் மிக்கதாக இருக்கிறது. அது போல் இதையும் கருதலாம். இன்னும் அதிக மக்கள் நம் குழுமத்தில் இணைய இணைய கலைச்சொல்லாக்கம் குறித்த பன்முகப் பார்வை கிடைக்கும்.


இந்தக் குழுவின் சிறப்பு என்னவென்றால், இது சொற்களை ஆக்குபவர்கள் - சொற்களைப் பயன்படுத்துபவர்கள் - சொற்களைத் தேடுபவர்கள் ஆகிய அனைவரையும் ஒரே புள்ளியில் இணைக்கிறது. இவர்களுக்கு இடையில் கருத்துப் பரிமாற்றத்துக்கான ஒரு களமாக இருக்கிறது. பூட்டிய அறைக்குள் நான்கைந்து அறிஞர்கள் மட்டும் அமர்ந்து பேசி கலைச்சொற்களை இறுதி செய்து அவற்றை மக்கள் மேல் திணிப்பதற்குப் பதிலாக, இதை மக்களோடு மக்களாக அவர்களும் இணைந்து செய்ய வழிவகுக்கிறது. இலங்கை, மலேசியா, தமிழகம் என்று ஒவ்வொரு ஊரிலும் கலைச்சொல்லாக்கக்குழுக்கள் தனித்தியங்கி தமிழ்வழி அறிவியல் முன்னேற்றத்தில் குழப்பத்தையும் தேக்கத்தையும் உண்டாக்காமல், உலகம் முழுமைக்குமான ஒரு தமிழ்க் கலைச்சொல்லாக்கக் குழுவாக இதை வளர்த்தெடுக்க விரும்புகிறோம். மென்பொருள் உருவாக்கத்தில் மைய அமைப்புகள், திரைமறைவு அமைப்புகள் தகர்ந்து திறவூற்று இயக்கங்கள் வெற்றி அடைந்து வருவது போல் இதுவும் தமிழ் மொழியை முன்னெடுத்துச் செல்வதில் ஒரு முக்கிய நிகழ்வாக இருக்கும் என்று எதிர்ப்பார்த்து ஊக்கத்துடன் இயங்கி வருகிறோம். இப்பொழுது இக்குழுவில் இயங்குபவர்கள் பலரும் ஆர்வமுடைய இளைஞர்கள் என்றாலும் எங்களின் தமிழறிவும் ஆழமும் மட்டுப்படுத்தப்பட்டதே. எனவே, தமிழ் கலைச்சொல்லாக்கத்தில் கரை கண்ட அனுபவம் வாய்ந்த அறிஞர்கள் எங்களோடு இணைந்து பங்களிக்க, வழிப்படுத்த முன்வர வேண்டும் என்பதற்கான அழைப்பாகவும் இதை கருதலாம்.


ஒரு மனிதன் அறிந்திருக்கும் மொழி தான் அவனது சிந்தனை வளத்தை, அறிவுப் பரப்பைத் தீர்மானிக்கிறது. ஒரு இனத்தின் மொழி தான் அதன் பண்பாட்டை, திறத்தை பறைசாற்ற சிறந்த கருவியாக இருக்கிறது. Privacy என்ற சொல்லுக்கு தமிழ்ச் சொல் அறியத் திண்டாடுகையில் வேண்டுமானால், எங்கள் பணபாட்டில் ஒளிவுமறைவு இல்லை என்று தேற்றிக் கொள்ளலாம். பட்டினி என்ற சொல்லே இல்லையென்றால் எங்கள் நாட்டின் வளம் குறித்து பெருமைப்படலாம். ஆனால், அன்றாடம் பயன்படுத்தும் பாதிப் பொருட்களுக்கு, அன்றாடம் நம்மை இயக்கும் பாதி சிந்தனைகளுக்கு எம்மிடம் சொற்கள் இல்லையென்றால் அது எந்த விதத்திலும் பெருமிதம் தருவது அன்று.


ஒரு மொழியில் உள்ள சொற்களின் வளம், எல்லை தான் அந்த மொழியைப் பேசுபவனின் வளர்ச்சி எல்லையையும் தீர்மானிக்கிறது. மன உணர்வுகள், மரபு அல்லது சூழல் சார் சிந்தனைகள், பொருட்கள், இடங்கள் ஆகியவற்றுக்கு பெரும்பாலான வளம் மிக்க மொழிகளில் தனிச்சொற்கள் உள்ளன. ஒரு மொழியைப் பேசுவோரின் பரப்புக்கு வெளியில் இருந்து புதுச்சிந்தனைகள், பொருட்கள் வரும்போது அதைத் தங்கள் மொழியூடாகவே புரிந்து கொள்ள முனைகின்றனர். அப்படிச் சொற்கள் இல்லாதபோது. தங்கள் மொழி மரபுக்கு ஏற்ப புதுச் சொல்லாக்கம் செய்வது கால மாற்றத்துக்கும் தேவைக்கும் ஏற்பத் தானாக தனித்து உணரா வண்ணம் நிகழ்ந்து வர வேண்டிய ஒன்று. சீன, சப்பானிய மொழிகள் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளன. அவர்கள் மொழியின் நிகழ்கால வளமும் நிறைவும் அவர்கள் நாட்டு வளர்ச்சியும் இறையாண்மையும் ஒப்பு நோக்கத்தக்கது.


உலகளாவிய சிந்தனைகள், அறிவியல் நுட்பங்களை ஆங்கிலம் வழி அறிந்த நம் முன்னோர் அவற்றை தமிழ்ச் சிந்தனைக்கு ஆக்கித் தராமல், ஆங்கிலத்தை மட்டும் சொல்லித் தந்தது பெரும் பிழை. இதனாலேயே, இலக்கியம், ஆன்மிகத்துக்கான மொழியாகத் தமிழ் சுருங்கிப் போனதும் பொருளாதாரத் தேவைகளுக்காக ஆங்கிலத்தை சார்ந்திருக்கப் போய் சமூகப் பிளவுகளும் வந்தன. ஆங்கிலம் வழி முழுக்கப் பயின்றோர் தமிழாக்கப் பணிகளுக்கு வரும்போது சிந்தனைகளை தமிழாக்கமல் சொற்களை மட்டும் தனித்தனியாகத் தமிழாக்குவதும் நகைப்புக்குரிய மக்களின் வாழ்வோடு ஒட்டாத மொழிபெயர்ப்புகளை ஈனுகிறது. எனினும், முன்னோர்களையே குறை கூறிக்கொண்டிருக்காமல் பொறுப்பை நம் கையில் எடுக்கும் ஒரு முயற்சியாக இக்குழுவின் செயல்பாடுகளை கருதுகிறோம். ஆகவே உங்கள் அனைவரையும் எங்களுடன் இணைந்து பங்களிப்பும் உற்சாகமும் தருமாறு வேண்டுகிறோம்.


சரி, bug, format, subtitle, screensaver, video, ring tone - ஆகியவற்றுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் என்னவென்று அறிய உங்களுக்கு ஆவலா?


bug - வழு; format - வடிவூட்டம்; subtitle - உரைத்துணை அல்லது துணையுரை; screensaver - திரைக்காப்பு; video - நிகழ்படம்; ring tone - அழைப்போசை.


கடந்த ஒரு மாதத்தில் இது போன்று பல சொற்களுக்கும் புழக்கத்தில் இருக்கும் சொற்களை கண்டறிந்திருக்கிறோம். புதிதாக சொற்களை உருவாக்கியும் இருக்கிறோம். அவற்றை தனி இடுகையாகத் தருகிறேன்.


அன்புடன்,
ரவி.

|

1 மறுமொழிகள்:

ரவிசங்கர் said...

இந்த இடுகையின் முதற்பதிப்பு இங்கு - http://thamizhthendral.blogspot.com/2006/11/blog-post.html

என் வலைப்பதிவுகளை ஒதுங்க வைக்கும் பொருட்டு மீண்டும் இங்கு இட்டிருக்கிறேன்.