இணையத்தில் ஒரு முழுமையான ஆங்கிலம் - தமிழ் - ஆங்கிலம் அகரமுதலி இல்லாமல் இருப்பது பெரும் குறையாக இருந்து வருகிறது. ஆங்கிலம் நன்றாக அறிந்தவர்கள் Dictionary.com போன்ற தளங்களை பயன்படுத்த இயலும் என்றாலும், அவர்களுக்கும் ஓர் ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்னவென்று அறிவதில் சிரமம் உள்ளது. எளிய பள்ளிப்படிப்பு படித்த தமிழ் மட்டும் நன்கு அறிந்தோரும், ஆங்கிலம் பேசா நாடுகளில் வாழும் புலம் பெயர்ந்த தமிழர்களும் இணையத்தை பயன்படுத்துவது அதிகரித்து வரும் வேளையில் ஆங்கிலச் சொற்களுக்கான பொருளை தமிழ் மூலம் அறிந்து கொள்ளும் தேவை கூடி வருகிறது.
அங்கங்கு சிதறிக்கிடக்கும் ஆங்கிலம் - தமிழ் அகரமுதலிகள் கூட சொற்தொகுப்புகளாகவோ கலைச்சொல் திரட்டுகளாகவோ தான் உள்ளன. இவை பெரும்பாலான இணையப் பயனர்களுக்கு எளிதில் அறிய இயலாததாக உள்ளன. இவை பெரும்பாலும் சொற்களுக்கு ஒற்றை தமிழ்ச் சொல்லில் குத்து மதிப்பான பொருள் / தமிழாக்கம் தருவதுடன் நிறுத்திக் கொள்கின்றன. சொல்லின் மூலம், இலக்கண வகை, பயன்பாடுகள், உச்சரிப்பு முறைகள் போன்ற கூறுகளை விளக்குவதில்லை. ஒத்த பிற சொற்களையோ பிற மொழிகளில் ஒத்த சொற்களையோ அறியத் தருவதில்லை. பல அகரமுதலிகள் ஒருங்குறி எழுத்துருவை பயன்படுத்துவதில்லை. அப்படியே பயன்படுத்தினாலும் தகவல் தரவில் இருந்து வினவியே சொற்களுக்கான பொருள் அறிய வேண்டியிருப்பதால் கூகுள் போன்ற தளங்களில் இருந்து சொற்களுக்கான பொருளை வினவி அறிய இயலாது.
பல அகரமுதலிகள் பழந்தமிழ்ச் சொற்களுக்கான பொருளை தருவதாகவும் பழைய நிகண்டுகளை வலையேற்றுவனவாகவும் உள்ளன. நிகழ் காலச் சொற்களுக்கு பொருள் அறிய முடியாது. சொற்களுக்கான பொருளில் உள்ள தவறை நீக்குவதற்கோ அவற்றை மேம்படுத்துவதற்கோ வழியில்லை. தமிழ் இணையப் பல்கலைகழக கலைச்சொல் திரட்டுகள் பயன் மிகுந்ததாய் இருந்தாலும், அத்தளத்துக்குள் நுழைந்து தேடுவதே பாதாள குகைக்குள் நுழைவது போல் மோசமாக தளம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து பொறுப்பானவர்களுக்கு எழுதினாலும் மறுமொழிகள் வருவதில்லை; வராது என்பதும் ஆனா ஆவன்னா படித்த எல்லாருக்கும் தெரியும் :( . ஓரளவு பயனுள்ள அகரமுதலிகள், நிறுவனங்கள் வழங்குவதால் பதிப்புரிமையின் காரணமாக காக்கப்பட்டுள்ளன. நம் விருப்பத்துக்கு ஏற்ப பயன்படுத்த முடியாது.
இக்குறைகளைத் தீர்க்கும் வகையில் பல தமிழார்வலர்கள் இணையத் தமிழ் அகரமுதலி ஒன்றை உருவாக்க முனைந்தாலும் அவை தனிப்பட்ட முயற்சிகளாகவும் ஒரே வேலையை பலர் திரும்பத் திரும்ப வீணாகச் செய்வதாயும் தனி நபர் பெருமையை முன்னிறுத்துவதாகவும் உள்ளன. மேற்கண்ட அனைத்துக் குறைகளையும் தீர்ப்பதாய் இல்லாமலும் ஆர்வமுடைய பிறரும் எளிதில் இணைந்து பங்களிக்கவல்ல வெளிப்படையான நடைமுறைகளை கொண்டிருப்பதாகவும் இல்லை.
இவ்வனைத்து குறைகளையும் தீர்க்கும் வண்ணம், கட்டற்ற பன்மொழி - தமிழ் - பன்மொழி அகரமுதலி ஒன்றை உருவாக்கும் முயற்சியாக கடந்த ஈராண்டுகளாக தமிழ் விக்சனரி தளம் செயல்பட்டு வருகிறது. செயல்பாடு, கொள்கைகள், பயன்பாட்டில் இது தமிழ் விக்கிபீடியா தளத்தை ஒத்தது. அத்திட்டத்தை நடத்தும் இலாப நோக்கமற்ற விக்கிமீடியா நிறுவனத்தாலேயே பல மொழிகளிலும் நடத்தப்படுகிறது. தற்பொழுது இத்தளத்தில் 3000 சொற்களுக்கும் மேல் பொருள் சேர்க்கப்பட்டுள்ளது. இவற்றுள் தமிழ், ஆங்கில, ஜெர்மன் சொற்கள் அடங்கும். தற்பொழுது பெரும்பாலும் பங்களிப்பாளர் பின்புலத்தின் காரணமாக ஆங்கிலம் - தமிழ் அகரமுதலியை வளர்த்து எடுக்க கவனம் செலுத்தி வருகிறோம். சொற்களுக்கான பொருள் நல்ல தமிழில் வழங்கப்படுகிறது. ஒரு சொல் பெயர்ச்சொல்லா வினைச்சொல்லா என்பது முதலிய குறிப்புகள், ஒரு சொல்லை எப்படி பயன்படுத்துவது என்பதற்கு எடுத்துக்காட்டுச் சொற்றொடர்கள், உச்சரிப்பு ஒலிக்கோப்புகள், பொருத்தமான படங்கள், அச்சொல்லுக்கான பிற மொழி விக்சனரி இணைப்புகள் ஆகியவை தரப்படுகின்றன.
நீங்கள் அறிய விரும்பும் சொல்லை Googleல் இருந்தே தேடலாம். எடுத்துக்காட்டாக, mosquito ஆங்கிலம் என்ற குறிச்சொல்லை கொண்டு தேடினால் கூகுளில் முதல் முடிவாகவே விக்சனரி பக்க இணைப்பு இருக்கும். இதே முறையை பிற சொற்களை தேடவும் கையாளலாம். அனேகமாக முதற்பக்க முடிவுகளில் விக்சனரி இணைப்பு வந்து விடும். தளத்தில் உள்ள தேடல் பெட்டியைக் கொண்டோ அகரவரிசைப் பட்டியலைக் கொண்டோவும் தேடலாம். தேடிய சொல் காணக்கிடைக்காவிட்டால், அதை சேர்க்குமாறு தளத்தில் தெரிவிக்கலாம். எளிமையான சொல்லாக இருக்கும்பட்சத்தில் ஒரு நாளில் பொருள் சேர்க்கப்படுவது உறுதி. ஏற்கனவே உள்ள பக்கங்களில் திருத்தங்கள் செய்யலாம். நீங்களே புதிதாக ஒரு சொல்லுக்கான பொருளை சேர்க்கலாம். ஒரு சொல்லின் பொருள் குறித்த ஐயம், ஆலோசனை இருந்தால் அச்சொல்லுக்கான பேச்சுப் பக்கத்தில் கலந்துரையாடலாம். எவரும் அவர் விரும்பிய வண்ணம் கட்டுப்பாடின்றி பயன்படுத்தலாம், பங்களிக்கலாம் என்பதே இத்தளத்தின் சிறப்பு. பல பங்களிப்பாளர்களும் தொடர்ந்து தளத்தை கவனித்து வருவதால் பிழையான பங்களிப்புகள் உடனடியாக சரிசெய்யப்படுவதும் உறுதி.
இவ்வாக்கங்கள் யாவும் முழுக்க முழுக்க விருப்பத்தின் பேரில் தன்னார்வ முயற்சியாக செய்யப்படுகிறது. யாருடைய பெயரையும் முன்னிலைப்படுத்துவதில்லை. கோஷ்டி சேர்ப்பதில்லை. ஏற்கனவே இத்தளம் குறித்த விழிப்புணர்வு சிலருக்கு இருந்தாலும், எழுத்துப் பங்களிப்புகள் மிகக் குறைவாகவே உள்ளன. இது போன்ற முழுமையான தமிழ் அகரமுதலிகளை நிறுவனங்கள் உருவாக்கித் தரும் என்று எதிர்ப்பார்க்க முடியாது. உருவாக்கித் தரும் வரை காத்திருக்கவும் முடியாது. எனவே இத்தளத்தை ஆர்வமுடைய பிறருக்கு அறிமுகப்படுத்தும் விதமாகவும் கூடுதல் பங்களிப்புகளை ஈர்க்கும் விதமாகவும் இப்பதிவை எழுதுகிறேன்.
தமிழ் விக்கிபீடியா போன்று இத்தளமும் தமிழ் கணிமை இயக்கத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக விளங்கும் என்பதில் ஐயமில்லை. தமிழ் மூலம் பள்ளியில் பயிலும் சிறுவர்கள், தமிழ் மொழி பயிலும் பிற மொழியினர் ஆகியோருக்கு இது முக்கியமான கருவியாகத் திகழும். கலைச்சொல் முயற்சிகள், விவாதங்கள் ஆகியவற்றுக்கான மையமாகவும் விக்சனரி திகழும். ஏற்கனவே பல தளங்களிலும் சிதறிக் கிடக்கும் கலைச்சொல்லாக்கங்களையும் இங்கு திரட்டும் முயற்சிகளும் நடைபெறுகின்றன. சொற்களுக்கான பொருள் நல்ல தமிழில் விளக்கப்படுவதால், தமிழில் கலந்துள்ள பிற மொழிச்சொற்களையும் இனங்காணலாம். தற்பொழுது ஆங்கிலம் - தமிழ் அகரமுதலிக்கே கவனம் செலுத்தப்படுகிறது என்றாலும், பங்களிப்பாளர் திறன், அறிவைப் பொருத்து அவர்கள் தமிழ் உள்ளிட்ட எம்மொழிச் சொல்லுக்கும் தமிழில் பொருள் தரலாம்.
மேலும் இந்த நிரல்துண்டினை வெட்டி, உங்கள் பதிவின் அல்லது தளத்தின் ஒரத்தில் இட்டு, விக்சனரியை விளம்பரப் படுத்துங்கள். மேலும், கூகுள் Pagerank அதிகமாகி, நீங்கள், கூகுளில் தேடும் போது, விக்சனரியில் இருந்தால், அதை முதற்பக்கத்தில் காண வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.
நன்றி.
3 மறுமொழிகள்:
இந்த இடுகையின் முதற்பதிப்பு இங்கு - http://thamizhthendral.blogspot.com/2006/09/blog-post.html
என் வலைப்பதிவுகளை ஒதுங்க வைக்கும் பொருட்டு மீண்டும் இங்கு இட்டிருக்கிறேன்.
ரவி, மிக நன்றி, இன்று விக்சனரியை தேடி கண்டுபிடிக்க 20 நிமிடம் ஆச்சுங்க. நானும் பட்டைய போட்டுறேன். :)
நன்றி இளா. ஆனா, கண்டுபிடிக்க ஏன் அவ்வளவு நேரம் ஆச்சு?
tamil wiktionary னு கூகுளில் தேடினால் முதல்பக்கத்திலேயே வருதே?
Post a Comment